செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள விளாகம் கிராமத்தில் மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகள் ஈடுபடுத்தப்பட்டுவருவதாக, வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலையடுத்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் (பொறுப்பு) லட்சுமி பிரியா சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 3 குழந்தைகள் உள்பட கணவன், மனைவி என ஒரு குடும்பமே, மரம் வெட்டும் தொழிலில் ஐந்து ஆண்டுகளாக கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
![redemption-](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9932745_sla.jpg)
விசாரணையில் அவர்கள் வல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை மீட்ட வருவாய்த் துறை அலுவலர்கள், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துவந்து, அவர்களுக்கு விடுதலைச் சான்றிதழ் அளித்ததோடு, தற்காலிக நிவாரண உதவிகளையும் வழங்கினர்.
மேலும் அவர்களுக்கு, குடும்ப அட்டை போன்ற அடிப்படை உதவிகளும் உடனடியாகச் செய்துதர ஏற்பாடு செய்யப்படும் என்றும் வருவாய்க் கோட்டாட்சியர் கூறினார். அவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கிய நபர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.