செங்கல்பட்டு: உலகில் எத்தனையோ நாடுகள், எத்தனையோ இடங்கள் சுற்றிப்பார்பதற்கும், ரசிப்பதற்கும் உள்ளன. ஆனால் இவை அனைத்திலும் தனித்தன்மை வாய்ந்ததாக திகழ்கிறது மாமல்லபுரம் என்றழைக்கப்படும் மகாபலிபுரம்.
தமிழர்களின் தனி அடையாளமாக விளங்கிய கோயில் கட்டடக்கலை உருவான இடம் இது. இவற்றின் சிறப்புகளை அறிந்த சர்வதேச இயற்கை மற்றும் கலாசார பாரம்பரிய குழு, மாமல்லபுரத்தை உலக மரபுச் சின்னம் என அறிவித்து பெருமை சேர்த்துள்ளது.
சிற்பங்களின் சிறப்புகள்
மாமல்லபுரத்தில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக்கோயில், ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், படைப்புச் சிற்பங்கள் அனைத்தும் அந்த இடத்திற்கு தனிசிறப்பை மெருகூட்டி காட்டுகிறது.
பல்லவ ஆட்சி காலத்தில் முக்கியமான துறைமுகமாக விளங்கியது மாமல்லபுரம்.
கடந்த 2004 இல் ஏற்பட்ட சுனாமியில், கடற்கரை அருகே அமைக்கப்பட்டிருந்த கோயில்களில் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்பதை நினைவுகூற வேண்டும். கடற்கரை கோயில்கள் கடல் நீர் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பாறாங்கற்களை பாதுகாப்பு வேலியாகக் கொட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடற்கரை கோயில்
இந்த கடற்கரை கோயில்கள் உலக அளவில், தலை சிறந்து விளங்குவதால், 1948 ஆம் ஆண்டு உலக பண்பாட்டுச் சின்னம் என யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளதால், மாமல்லபுரம் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. அதிலும் இரு ஆண்டுகளுக்கு முன், சீன அதிபரும், இந்தியப் பிரதமர் மோடியும் இங்கு சந்தித்து பேசியது, மாமல்லபுரத்தை உலக அரங்கில் கவனத்தை கவரும் இடமாக மாற்றியது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மாமல்லபுரம், கடந்த இரு வருடங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக பார்வையாளர்களின் வருகை குறைந்து பொலிவிழந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் மெதுவாகத் தனது பழைய பொலிவினை மாமல்லபுரம் பெற்று வருகிறது.
மீண்டும் தொடரும் சுற்றுலா
வார இறுதி நாட்களில் பார்வையாளர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் முக்கிய தொழில்களில் ஒன்றான சிற்பம் வடித்தல் தொழிலை தொழிலாளர்கள் மீண்டும் கவனிக்க தொடங்கியுள்ளனர்.
அதேவேளையில், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படாத பிரச்சினையாக, பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது என்கின்றனர் இப்பகுதி மக்கள். சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்களை, முறைப்படி நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகள் குறைவாகவே உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில் போன்ற இடங்களுக்குச் செல்லும் சாலைகள் எப்போதும் நெரிசலுடன் காணப்படுகின்றன. வரும் காலங்களில் இந்தக் குறைபாடுகளை அலுவலர்கள் களைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: அசைவ, மதுப்பிரியர்களுக்காக மெகா தடுப்பூசி முகாம் நாள் மாற்றியமைப்பு