செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்து, கிறிஸ்து, இஸ்லாம் ஆகிய மூன்று மதத்தினருக்கும் பொதுவாக வேங்கைவாசல் ஏரியை ஒட்டியுள்ள இடம் சுடுகாடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் நேற்று (மார்ச்.6) ஜேசிபி இயந்திரம் மூலம் சுடுகாட்டிற்கு அருகே இருக்கும் ஏரியின் கரைகளை விரிவுப்படுத்தி கரைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கேட்டபோது ஏரியை அகலப்படுத்த கரைகள் அமைப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கரை அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் வேங்கைவாசல் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சேலையூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைய செய்தனர்.
பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சுடுகாடில் கரைகள் அமைக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதியினர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியினரிடம் கேட்டபோது, சுடுகாட்டில் கரைகள் அமைத்துவிட்டால் வேங்கைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உயிரிழப்பவர்களை எங்கு சென்று அடக்கம் செய்வது எனக் கேள்வி எழுப்பினர். சுடுகாட்டில் கரைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நெடுஞ்சாலைத் துறை பணி நியமனத்தில் முறைகேடு: அரசு அறிக்கை அளிக்க உத்தரவு