எதிர் வரும் தேர்தலில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளராக திருக்கச்சூர் ஆறுமுகம் அறிவிக்கப்பட்டு, பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக எஸ்.எஸ்.பாலாஜி போட்டியிடுகிறார். அமுமுக சார்பில் ராக வி.கோதண்டபாணி களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், திருப்போரூரில் அதிமுக தலைமை வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று (மார்ச்.22) நடத்தப்பட்டது. இதில் அதிமுக மாவட்டச் செயலர் ஆறுமுகம் தலைமை ஏற்று உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
”எடப்பாடி ஆட்சி கூடிய விரைவில் முடிந்துவிடும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஆனால் இன்று வரையிலும் அதிமுக அரசு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் கனவில்கூட முதலமைச்சராக முடியாது. மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர். சிறப்பாக களப்பணியாற்றி அனைத்து வாக்குகளையும் அறுவடை செய்ய வேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாமக மாநிலச் செயலர் ஏ.கே மூர்த்தி, அதிமுக மாவட்டச் செயலர் எஸ்.ஆறுமுகம், பாஜக மாநிலச் செயலர் தனசேகரன், புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலர் ஏ.கே.லோகு, அனைத்து கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:’ஊழல் அரங்கேறினால் இந்தியன் தாத்தாவாக மாறுவேன்’ - கமல்