செங்கல்பட்டு: ஊரக ஊராட்சித் தேர்தல்கள் வரும் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தலுக்கான பரப்புரை பணியில் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் மும்முரமாக உள்ளனர். அதே வேளையில், மற்றொரு தரப்பினரும் மும்முரமாக தங்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு, தங்கள் கட்சி சார்ந்த கொடிகளைக் கட்டிக்கொண்டு சொகுசு வாகனங்களில் வரும் பலர், பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக இந்த மதுபாட்டில்கள் வாங்கிச் செல்லப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல், தேர்தல் நடக்கும் வட்டங்களில், தேர்தல் நாளைக்கு முன்னதாக இரண்டு நாட்கள், ஆக மொத்தம் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மூன்று நாட்களும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு இந்த மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்படுகின்றனவா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறு மொத்தமாக வாங்கப்படும் மதுபாட்டில்கள், விடுமுறை நாட்களில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு விலைக்கு மதுப்பிரியர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கும் தெரியும் என்பதுதான் வேதனை என்கின்றனர் பொதுமக்கள். சில இடங்களில், டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்களே, வெளியாட்களுடன் சேர்ந்து, இதுபோன்று மொத்தமாக சரக்கை வெளியே எடுத்துச் சென்று, கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதும் நடைபெறுகிறது என்கின்றனர் விவரம் அறிந்தோர். இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகமும் போலீசாரும் விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைத்தளங்கள் தற்காலிக முடக்கம்