செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக இவரது வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் ஒன்றரை லட்சம் ரூபாய் திருடப்பட்டது.
பணம் மாயமானது குறித்து வங்கியில் புகார் அளித்தும் எந்தவிதத் தீர்வும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் சுதாகர், தனது பணம் மாயமானது குறித்துப்புகார் அளித்தார். இவரது டெபிட் கார்டு எண்ணைப்பயன்படுத்தி மோசடியாக, பணம் பல தவணைகளில் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக களத்தில் இறங்கிய செங்கல்பட்டு மாவட்ட சைபர் பிரிவு காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு சுதாகரின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டெடுத்தனர். இதையடுத்து அறிமுகமற்ற எண்ணிலிருந்து வரும் எந்த விதமான குறுஞ்செய்திகளையோ வாட்ஸ்அப் லிங்குகளையோ திறக்க வேண்டாம் என்றும், தங்களுடைய டெபிட் கார்டு எண், ஓடிபி போன்றவற்றை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் செங்கல்பட்டு மாவட்ட சைபர் பிரிவு காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை காப்பகத்துக்கு வழங்கிய குடும்பம்