செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் முனி சேகர். இவர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் காவல் துறை உயர் அலுவலர்களுக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பணிபுரிந்த வேறு சில காவல் நிலையங்களில், மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக இவர் மீது பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க, வேற்று மாநிலத்திற்குச் செல்வதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பொழுது, குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற காவல் அலுவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உடன்வந்த காவல் அலுவலரை முனி சேகர்தான் தவறுதலாகச் சுட்டுவிட்டார் என்ற பரபரப்பு அப்போது எழுந்தது.
பெண்ணுடன் ஆபாச சாட்டிங்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி சென்னைக்குச் சென்றார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருக்கழுக்குன்றத்திற்கு வந்து தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணிடம் அறிமுகமான முனி சேகர் அவருடன் தொடர்பில் இருந்துவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கேள்விப்பட்ட சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், தனது மனைவியின் மொபைல் போனை வாங்கி ஆராய்ந்தபோது, அதில் அவரது மனைவியுடன் ஆய்வாளர் முனி சேகர் ஆபாசமாக வாட்ஸ்அப் மூலமாக சாட் செய்துவந்தது தெரியவந்துள்ளது.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இதனையடுத்து முனி சேகரை சம்பந்தப்பட்ட நபர் சந்தித்து எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், முனி சேகர் காவல் துறை ஆய்வாளர் என்ற அதிகாரத்தில், அந்த நபரை மிரட்டி அனுப்பியுள்ளார். இதில் பயந்துபோன அந்தப் பெண்ணின் கணவர், காவல் துறை ஐஜி முதலான உயர் அலுவலர்களுக்கு ஆதாரத்துடன் புகார் அளித்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து ஆய்வாளர் முனி சேகரை பணியிலிருந்து விடுவித்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்து ஓட்டுநர் மரணம்!