செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள திம்மாவரம் கிராமத்தில் மூன்று மாதங்களாக சரிவர குடிதண்ணீர் வரவில்லை எனக் கோரி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
“திம்மாபுரம் கிராமத்தில் குடிநீருக்காக ஏரிக்குள் புதிதாக குடிநீர் கிணறு தோண்டப்பட்டுள்ளது. அந்தக் கிணற்றிலிருந்து புதிய பைப் லைன் பதிக்காமல் காலதாமதம் செய்வதால் கிராமத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது.
ஏற்கனவே உள்ள கிணற்றில் தனியார் பால் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கலப்பதால் குடிநீர் கிணறின் நீரைப் பயன்படுத்த முடிவதில்லை. அதற்கு மாற்றாக மக்களின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க அரசு அலுவலர்கள் எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள கிராம பஞ்சாயத்து செயலரும் மக்கள் பிரச்னையை கண்டுகொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்” என சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.