செங்கல்பட்டு: மதுராந்தகம் கோட்டத்திற்குள்பட்டது அச்சிறுப்பாக்கம் கலால் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையம், நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழைய கட்டடத்தில் இயங்கிவருகிறது. ஏற்கனவே இங்கு செயல்பட்டுவந்த சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு புது கட்டடம் இதற்கு அருகிலேயே கட்டப்பட்டு அங்கு இடம்பெயர்ந்தது.
அதன்பின்னர், இந்தப் பழைய கட்டடத்தில் மதுவிலக்குக் காவல் நிலையம் இயங்கிவருகிறது. இது மிகப் பழமையான கட்டடம் என்பதாலும், இதுவரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததாலும் மழைக் காலங்களில் இந்தக் காவல் நிலையமே வெள்ளக்காடாக காட்சியளித்துவருவது வழக்கமான ஒன்று.
சற்றே கனமழை பெய்தாலும் கட்டடத்தின் மேற்கூரை ஒழுகுவதோடு, சுற்று வட்டாரத்தில் தேங்கி நிற்கும் நீர் சுவரில் ஊடுருவி கசிந்து காவல் நிலையத்திற்கு உள்ளேயே முழங்கால் அளவிற்கு நீர் நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் உள்ளே தேங்கும் நீரை வாரி வெளியே இறைப்பது இங்குள்ள காவலர்களுக்குப் பெரும் பணியாக உள்ளது.
இந்தக் கட்டடத்தைச் சீரமைத்துப் பழுதுபார்க்க வேண்டும் அல்லது வேறு ஒரு புதிய கட்டடத்திற்கு மதுவிலக்குக் காவல் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க: தி.மலையில் கழுத்தளவு வெள்ளத்தில் சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம்