செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில், BMW கார் தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இத்தொழிற்சாலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இத்தொழிற்சாலையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 17 மாதங்களாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இது குறித்து மூன்று முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தும், எவ்விதப் பயனும் இல்லை எனத் தொழிலாளர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
வேலை நிறுத்தப் போராட்டம்
இதற்காக தொழிற்சங்கத் தரப்பில், வேலை நிறுத்த அறிவிப்பு அளிக்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை ஆணையர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியிலிருந்து வந்தனர்.
இதனிடையே, தொழிற்சங்க நிர்வாகிகள் 9 பேருக்கு, நிறுவனம் கட்டாய பணி விடுப்பு அளித்தது.
அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, நேற்று (ஆகஸ்ட். 25) மதியம் இந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட். 26) பணிக்கு வந்த தொழிலாளர்களிடம், அந்நிறுவனம், உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்து கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.