செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பாலாற்றின் கரையில் இருக்கும் கிராம மக்களுக்கு மாவட்ட பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மாண்டஸ் புயலைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை ஆங்காங்கே இன்னும் பெய்து வருகிறது.
பாலாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், உள்ளாவூர் பழைய சீவரம் அணைக்கட்டில் இருந்து பத்தாயிரம் கன அடி நீரும், வாயலூர் அணைக்கட்டில் இருந்து 40,000 கன அடி நீரும் வெளியேறுகிறது. மழை மேலும் தொடரும் பட்சத்தில் பாலாற்றில் நீர்வரத்தும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆகவே பாலாற்றின் கரையோரங்களில் உள்ள கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை கடக்க முற்பட வேண்டாம் என்றும், ஆற்றில் இறங்குவது, குளிப்பது, துணிகள் துவைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி காவல்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறையினர் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களை கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கீழ்பவானி கால்வாய் உடைபால் 300 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு!