செங்கல்பட்டு : நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஐந்து அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.இந்நிலையில், ஜி.எஸ்.டி., சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 4014 -ல் நேற்று (பிப்.18) திடீரென கரும்புகை எழுந்துள்ளது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், டாஸ்மாக் கடையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கடையினுள் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்தத் தீ விபத்தில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேலான மதுபான பாட்டில்கள் எரிந்து நாசமாகின.