செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஈசூர் பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, உழவர்களிடம் அரசு நெல் கொள்முதல் செய்துவந்தது.
சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த, 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு தங்கள் நெல்லை விற்பனை செய்துவந்தனர். ஒரு போகம் அறுவடையின்போது, குறைந்தபட்சம் இப்பகுதியில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வரும்.
அந்தவகையில், தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அங்கு உள்ளன. ஆனால், தேர்தல் பணிகளைக் காரணம்காட்டி, நெல்லை அலுவலர்கள் கொள்முதல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த உழவர்கள், உரிய காலத்தில் நெல் கொள்முதல் செய்யாத அரசைக் கண்டித்து, சாலையில் நெல்லைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.