செங்கல்பட்டு: சென்னை அடுத்த குரோம்பேட்டையைச்சேர்ந்த விநாயகர் பக்தரான கட்டடக்கலை நிபுணர் சீனிவாசன் என்பவர், தான் இரண்டு ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் அனைவருக்கும் காட்சிப்படுத்தும் விதமாக இலவச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய எண்ணினார்.
அதன் ஒருபகுதியாக, இன்று (ஆக.31) விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிட்லப்பாக்கத்தில் இன்று 20,000 விநாயகர் சிலைகளுடன் நடந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் பலதரப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றநிலையில், குறிப்பாக படகு ஓட்டும் விநாயகர், டாக்டர் விநாயகர், ரயிலில் பயணிக்கும் விநாயகர், வீணை வாசிக்கும் விநாயகர் போன்றவை பலரின் கவனத்தையும் ஈர்த்தன.
மேலும், பலவகை கற்களால் ஆன விநாயகர், இந்தியாவில் உள்ள அனைத்து விநாயகர் திருவுருவப்படங்கள் கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேலான விநாயகர் சிலைகள் 3 தளங்களில் வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி இன்று முதல் செப்.12ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜர், தாம்பரம் மாநகராட்சி 2ஆவது மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் கொழுக்கட்டை படையல்... அசரவைக்கும் காரணம்?!