செங்கல்பட்டு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இருளர் இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா, குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்ற அடிப்படை உரிமைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் இரண்டாவது மாவட்ட ஆட்சியராக, பொறுப்பேற்ற ராகுல் நாத், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், ஈடிவி பாரத் சார்பாக, இருளர் இனத்தவர் படும் இன்னல்கள் எடுத்துரைக்கப்பட்டது. அதை அப்போது குறித்துக்கொண்ட ஆட்சியர், நேற்று (ஜூலை 23) செயலில் இறங்கினார்.
முதற்கட்டமாக, அச்சிருப்பாக்கம் பகுதியில் வசிக்கும் சுமார், 68 இருளர்களுக்கு, சாதிச் சான்றிதழ்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் வழங்கினார். அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் சாதிச்சான்றிதழை, மாவட்ட ஆட்சியரே வீடு தேடி வந்து வழங்கியது, அம்மக்களை, மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல், மின்சார வசதி, குடியிருப்பு, பட்டா போன்றவை அடிப்படைத் தேவைகளையும், மாவட்ட ஆட்சியர் நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.