செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு சிகிச்சை பெற்று வந்த 13 நோயாளிகள் ஒரே நாள் நள்ளிரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
நோயாளிகளின் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடே காரணம் எனவும் செய்திகள் பரவின. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்ததாக கூறப்படும் கரோனா நோயாளிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், போர்க்கால அடிப்படையில் கரோனாவை கட்டுப்படுத்த செயல்பட வேண்டும். நோயாளிகளின் நலன் காக்கும் வகையில் 24 மணி நேரமும் வருவாய்த் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மருத்துவமனை கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க : ’ஒரு வாரத்திற்குள் பதிலளிங்க...’; முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு நோட்டீஸ்!