செங்கல்பட்டு: தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம், விரைந்து வளர்ச்சி பெற்று வரும் மாவட்டமாக தற்போது திகழ்ந்து வருகிறது. தொழிற்சாலைகள், விவசாயம் என அனைத்துத் துறைகளிலும் செங்கல்பட்டு மாவட்டம் நிலையான வளர்ச்சி அடைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் தொகையும் வருவாய் வீதமும் ஆண்டுக்காண்டு மாறுபட்டு வருகின்றன.
இத்தகைய வளர்ச்சிகளைக் கணக்கில் கொண்டு, அதற்கு ஏற்ப மாவட்டத்தில் உள்ள 16 ஊராட்சிகளை பேரூராட்சிகளாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே அச்சுறுப்பாக்கம், கருங்குழி இடைக்கழி நாடு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.
இதில் தற்போது மாமல்லபுரம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள கோவளம், முட்டுக்காடு, நாவலூர், தாழம்பூர், புதுப்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளும், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளும் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
அதேபோல் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வண்டலூர், நெடுங்குன்றம், ஊரப்பாக்கம், வல்லம், சிங்கபெருமாள் கோவில், ஆலப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளும், லத்தூர் ஒன்றியத்தில் உள்ள செய்யூர், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சூனாம்பேடு என மொத்தம் 16 ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
அந்தந்த ஊராட்சிகளின் மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றித் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது அவற்றை ஒட்டியுள்ள ஊராட்சிகளை இவற்றுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என பிரதமர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார்" - மத்திய அமைச்சர் வி.கே.சிங்!