செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்துவருபவர் கார்த்திக். எலக்ட்ரானிக் பொருள்களை விற்பனை செய்பவரான இவருக்கு கனிஷ்கா என்ற ஐந்து வயது மகள் உள்ளார். இவரது மகள் கனிஷ்காவுக்கு சிறு வயதிலிருந்தே இதயக் கோளாறு பிரச்னை இருந்துவந்துள்ளது சிறுமிக்கு மூன்று முறை இதய அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது, சிறுமிக்கு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ஐந்து லட்ச ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.
ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் அறுவைச் சிகிச்சைக்கு பணமின்றி கார்த்திக் தவித்துவந்துள்ளார். இதுகுறித்து கார்த்திக் வீட்டின் அருகாமையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு குடியிருந்த நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து செந்தில்குமார், நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் தங்கராஜிடம் உதவி கோரியுள்ளார்.
மேலும், செந்தில்குமார் தன்னிடமிருந்த 30 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து உதவியுள்ளார். பின்னர், காவல் ஆய்வாளர் உதவியுடன், அறுவைச் சிகிச்சைக்கு தேவையான ஐந்து லட்ச ரூபாயை சேர்த்துள்ளனர். இதையடுத்து சிறுமிக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை நடைபெற்று முடிந்தது.
தகுந்த நேரத்தில் பணம் கொடுத்து உதவி மகளின் உயிரைக் காப்பாற்றிய ஆய்வாளர் தங்கராஜ், தலைமைக் காவலர் செந்தில்குமார் ஆகியோருக்கு கார்த்திக் நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் பலரும் காவலர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.