செங்கல்பட்டு: பெருங்களத்தூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்தப் பேருந்தில் தனது மகன் மற்றும் மகளுடன் கீழ்பெண்ணாத்தூரைச் சேர்ந்த கல்பனா என்பவர் பயணித்தார்.
தாம்பரம் பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் கல்பனா, தான் சம்பாதித்த பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களோடு விடுமுறைக்காக சொந்த ஊர் நோக்கி பேருந்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.
அப்போது பேருந்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் கல்பனாவின் பையை திருடியதாகத் தெரிகிறது. பையில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் மொபைல் போன் உள்ளிட்டப்பொருட்கள் காணாமல் போனதால் மனவேதனையில் கத்தி கூச்சல் போட்ட கல்பனா கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து பேருந்தை நிறுத்திய பயணிகள் அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. அப்போதும் கல்பனாவின் திருடு போனதாக கூறப்படும் பொருட்கள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
சொந்த ஊருக்குப் போக வழி தெரியாமல் கண்ணீர் மல்க பரிதவித்த கல்பனாவிற்கு, சக பயணிகள் அனைவரும் சேர்ந்து பண உதவி செய்தனர். மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுரை வழங்கி,அனுப்பிவைத்தனர். பேருந்தில் சக பயணிகளிடம் கண்ணீர் விட்டு கல்பனா கதறும் காட்சி காண்போரின் கண்களை கலங்கச் செய்கிறது.
இதையும் படிங்க: உயர் மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க அனுமதி