செங்கல்பட்டு: நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், இருட்டறையில் முரட்டுக்குத்து, நோட்டா, கழுகு 2, பெஸ்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து, பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு யாஷிகா ஆனந்துக்கு கிடைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு, யாஷிகா ஆனந்தின் வாழ்க்கையில் ஒட்டுமொத்த திருப்புமுனையாக அமைந்தது. 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களான வள்ளி செட்டி பவானி, அமீர், சையத் ஆகியோருடன் காரில் புதுச்சேரி சென்றிருந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது நள்ளிரவில் சூளேரிக் காடு என்ற இடத்தில் இவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அமீர் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்த விபத்து குறித்து மகாபலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் விசாரணைக்காக நடிகை யாஷிகா ஆனந்த் மார்ச் 21ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், அன்று அவர் ஆஜர் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த செங்கல்பட்டு நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு பேருந்து லாரி மோதி விபத்து.. 30 பேரின் நிலை என்ன?