செங்கல்பட்டு: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் பிளவு உண்டானது. இரு பிரிவினருக்கிடையே நடந்த போட்டியில் கட்சியின் சின்னமான இரட்டை இலை யாருக்கு சொந்தம் என பிரச்சனை எழுந்தது. இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில், பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் பேரம் பேசப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
சின்னத்தை மீட்க 50 கோடி ரூபாய் லஞ்சமாக சுகேஷ் சந்திரசேகர் பெற்றதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. இது மட்டும் இன்றி பல்வேறு வகையில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்கு பதியப்பட்டது. தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தினகரனோடு அவரது நண்பர் மல்லிகார்ஜுனனும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் தினகரன் ஜாமீனில் விடுதலை ஆனார். மேலும் சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கியில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து கடன் பெற்ற குற்றச்சாட்டும் அதில் ஒன்று.
சென்னை கானாத்தூரில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் ஐந்து நாட்களுக்கு மேலாக சோதனை நடைபெற்றது. இதில் 80 லட்சம் ரூபாய்க்கு மேலான பணம், தங்க, வெள்ளி ஆபரணங்கள், 20-க்கும் அதிகமான சொகுசு கார்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் சிறையிலிருந்து கொண்டே சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு மோசடிகள் ஈடுபட்டு வந்ததும் இந்த சோதனையின் போது அம்பலமானது.
வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று(அக்.7) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராகக் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நம்பர் செய்யப்பட்டு நடைமுறைக்கு வருவதற்கு பத்து தினங்களுக்கு மேலாகும் என்று கூறப்படுகிறது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இனி இந்த வழக்கு வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த திமுக,பாமக பிரமுகர்கள்