செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுதேவாதூர் ஊராட்சியில் அதே பகுதியை சேர்ந்த நிர்மலா தேவி என்பவர், ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கிராம மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் ஏரி வேலை அட்டை எனப்படும் 100 நாள் பணிக்கான அட்டைக்கு, பணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது.
இது குறித்து அப்பகுதி வார்டு உறுப்பினர் ஒருவர், இவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் நிர்மலா தேவி, ஆடிட்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்குக் கொடுப்பதற்காகத்தான், தான் ஒரு அட்டைக்கு 200 ரூபாய் பணம் வசூலிப்பதாகக் கூறுகிறார்.
மேலும், தான் வாராவாரம் செங்கல்பட்டு அலுவலகத்திற்குச் சென்று வர ஆகும் செலவையும் இதன் மூலம் தான் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிடுவேன் என்று அந்த வார்டு உறுப்பினர் கூற, எங்கு வேண்டுமானாலும் சென்று தாராளமாக முறையிடலாம் என்றும் நிர்மலா தேவி தில்லாக பதிலளிக்கிறார்.
அதிகாரிகளுக்குக் கொடுக்கவும், தன் போக்குவரத்து செலவுக்காகவும் கிராமவாசிகளிடம் லஞ்சம் வாங்குவதாக, ஊராட்சி செயலர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் ஆடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க:உதயநிதியின் தேர்தல் வெற்றி மீதான வழக்கு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்