சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் ரமணி நகரை சேர்ந்தவர் கிருபாகரன். இவர் தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஜூலை 4) முடிச்சூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த இருவருக்கும் இவருக்கும் தரகாறு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் இருவரும் தலை கவசத்தை கொண்டு கிருபாகரனை சரமாரியாக தாக்கினர். இதனால் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதைத்தொடர்ந்து கிருபாகரன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றப் பின் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் தாக்குதல் நடத்திய இருவரும் புது பெருங்குளத்தூரைச் சேர்ந்த தந்தை ராஜா(58), மகன் சீனிவாசன் (26 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களது வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: TTF வாசன் மீது குவிந்த புகார்களும்... காவல் துறையின் பதிலும்... நடவடிக்கை பாயுமா?