செங்கல்பட்டு மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் திருத்தலங்களில் ஒன்று திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார், 10 கிரவுண்ட் நிலம் தாம்பரம் தாலுகா, சிட்லப்பாக்கம் பகுதியில் உள்ளது.
சிட்லபாக்கத்தின் முக்கியக் குடியிருப்புகள் உள்ள இடத்தில் அமைந்துள்ள இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு, 25 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனக் கூறுகின்றனர். இந்நிலத்தை, நீண்ட காலமாக தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்க இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல் தலைமையிலான அலுவலர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட ஆக்கிரமிப்பாளர்களை காவல் துறை மூலம் எச்சரித்து, நிலத்தை கோயில் வசம் சுவாதீனம் எடுத்தனர். நிலம் அளக்கப்பட்டு, நான்கு புறமும் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டு, அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.
மேலும், மேற்படி நிலத்தின் சர்வே எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு, இந்த நிலம் தொடர்பான எந்தப் பத்திரப்பதிவும் போலி ஆவணங்கள் மூலம் நடைபெறக் கூடாது என தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!