44-ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில், இந்தியாவின் சார்பில் விளையாட, பெண்கள் உட்பட 20 போட்டியாளர்கள் அடங்கிய நான்கு குழுக்களை, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு களமிறக்கியுள்ளது.
இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போட்டியாளர்களில், 6 ஆண்கள் 2 பெண்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உள்ளனர். இந்திய போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக விஸ்வநாதன் ஆனந்த் செயல்படுவார். ஆனாலும் விஸ்வநாதன் ஆனந்த், இந்தப் போட்டியில் விளையாடவில்லை.
2020 ஆம் ஆண்டு ஆன்லைனில் நடத்தப்பட்ட சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவை தங்கப்பதக்கம் நோக்கி வழிநடத்திய விதித் குஜ்ரதி, பல தருணங்களில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களான பெண்டலா ஹரிகிருஷ்ணா, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன் சசிகிரண் ஆகியோர் ஓபன் பிரிவில் களமிறங்க உள்ளனர்.
19 வயதாகும் அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல். நாராயணன் ஆகியோரும் முதல் குழுவில் பங்கு பெறுகின்றனர். ஓபன் பிரிவு 1 இல், விதித் குஜ்ரதி, ஹரிகிருஷ்ணன், அர்ஜுன் எரிகைசி, நாராயணன், சசிகிரண் ஆகியோர் உள்ளனர்.ஓபன் பிரிவு 2 இல், நிஹல் சரின், குகேஷ், அதிபன், பிரக்னானந்தா, ராணக்சத்வானி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மகளிர் பிரிவு 1இல், கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணாவல்லி, வைஷாலி, தானியா ஷாதேவ், பாக்டிகுல்கர்ணி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மகளிர் பிரிவு, 2இல் சவுமியா சாமிநாதன், மேரி ஆன்கோம்ஸ், பத்மினி ரவுட், வந்திகா அகர்வால், திவ்யா தேஷ்முக் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.போட்டியாளர்களுக்கான பயிற்சிகள் மே 8 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
இதையும் படிங்க: கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண் சிற்பம் கண்டுபிடிப்பு