நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை குடியரசு தலைவர் நிராகரித்து, அப்போதே அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உயர்நீதிமன்றத்தில் அளித்த பதில் குறித்து அரசின் கவனத்தை பெற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.
அதில் 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மசோதாக்களை நிராகரித்துவிட்டு 21 மாதங்கள் கடந்த போதிலும், எந்த அழுத்தத்தையும் தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும், மீண்டும் அதே இரண்டு மசோதாக்களை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசு தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், நீட் மசோதாக்களை குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக செப்டம்பர் 22, 2017 அன்று தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் அதில் நிராகரிக்கப்பட்டது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. மேலும், நிறுத்திவைக்கப்பட்டதற்கான காரணம் கேட்டு பதில் கடிதம் அனுப்பியும், எந்த விளக்கத்தையும் மத்திய அரசு அளிக்கவில்லை. மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் கேட்டு இதுவரை 12 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அரசு காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால், மீண்டும் மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப தயாராக உள்ளோம் என்றும் இதற்கும் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் வழக்கு தொடர அரசுக்கு பயமில்லை எனவும் தெரிவித்தார்.