மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் பானை சின்னத்தில் போட்டி இடுகிறார் என்பதால், அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில், நடு வீதியில் பானைகளை உடைத்து, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியினர் நடத்தியுள்ள வன்முறை, கண்டனத்திற்கு உரியதாகும்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் கொளுத்தி உள்ளனர். ஒரு தலித் சகோதரர், தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலும், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அமைதிக்குப் பங்கம் நேர்ந்துள்ளது. பாஜகவினால் ஆட்டுவிக்கப்படுகின்ற தமிழ்நாடு ஆளுங்கட்சியும் இணைந்து, சட்ட ஒழுங்கைக் கேள்விக்குறி ஆக்குகின்ற நடவடிக்கைகள் தொடர்வது, பொது அமைதிக்கு ஆபத்து உருவாகி இருக்கின்றது.
சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிப்போர் மீது, காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உரிய பாதுகாப்புத் தர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.