திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்த பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டின் தனித்துவத்தைப் நடந்து முடிந்த தேர்தல் முடிவு பிரகடனம் செய்திருக்கிறது. இந்த தேர்தலில் மக்களவையில் மூன்றாவது இடத்தை திமுக பெற்றுள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் பிற பகுதிகளில் பாஜக ஊடுருவ முடிந்தாலும், திமுக கோட்டையில் அவர்கள் உள்ளே நுழைய முடியவில்லை. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னைகளைக் களைய, நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடுபடுவார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கலைஞர் மறைவுக்குப் பின்னர் வீறு கொண்டு எழுந்த சக்தியாக திமுகவை முன்னெடுத்துச் செல்லும் புகழும், பெருமையும் ஸ்டாலினைச் சாரும். அகில இந்திய அளவில் ஸ்டாலின் மதிப்பு உயர்ந்துள்ளது. எடப்பாடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. அடுத்த முதலமைச்சராக ஸ்டாலின்தான் வருவார்" எனக் கூறினார்.