டிக்-டாக் செயலியில் ஆபாசமான வீடியோக்கள் அதிக அளவில் வெளியாவதால், அந்த செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த வாரம் தற்காலிக தடை விதித்தது.
இதனால், டிக்-டாக் செயலி ப்ளே-ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அந்த செயலியை உருவாக்கிய பைட் டான்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்றைக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் அந்த செயலி மீதான தடை தானாகவே நீக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டிக்-டாக் செயலியில் ஆபாசமான வீடியோக்கள் பதிவிட்டால் அதை நீக்குவதாக, அந்நிறுவனம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த செயலி மீதான தற்காலிக தடையை நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் நீக்கியது.