தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 1 தேர்வு மார்ச் 6ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்தத் தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் உள்ள எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ, மாணவியரும் 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் எட்டு லட்சத்து 21 ஆயிரத்து 650 பேர் புதிய பாடத்திட்டத்தில் எழுதினர்.
மேலும் கடந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தில் எழுதி தோல்வியடைந்த மாணாக்கர்களும், தனித்தேர்வர்களும் பழைய பாடத்திட்டத்திலேயே மீண்டும் மார்ச் 2019 பிளஸ் 2 பொதுத்தேர்வின்போது தேர்வு எழுதினர்.
இந்தப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30க்கு வெளியானது. இதில் மொத்தமாக 95 விழுக்காடு தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.5 விழுக்காடும், மாணவர்கள் 93.3 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள், வழக்கம் போல் மாணவர்களை விட அதிக விழுக்காடு பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்வில் மாவட்ட அளவில் ஈரோடு மாவட்டம் 98 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 97.90 விழுக்காடு பெற்று திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடமும், 97.60 விழுக்காடு தேர்ச்சியுடன் கோயம்புத்தூர் மூன்றாம் இடமும் பெற்று சாதனைப் படைத்துள்ளன.
தேர்வு எழுதிய 2,896 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2,721 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தேர்வு எழுதிய 78 சிறைவாசிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.