அனைத்து திரையரங்குகள், உணவகங்கள், கடைகள், வங்கிகள், பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஆகியவை 24 மணி நேரமும் இயங்குவதற்கு 2016ஆம் ஆண்டு மத்திய அரசு சட்ட மசோதாவை அமல்படுத்தியது. இந்தியாவில் இந்த மசோதாவை மகாராஷ்டிர மாநிலம் முதலில் அமல்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒரு வருடம் மட்டுமே அமலில் இருந்தது.
இந்த நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிக்க கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் திறந்துவைக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் வெளியிட்டுள்ள இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகள்:
- வாரம் ஒரு நாள் ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும்.
- பணியில் இருக்கும் ஊழியர்கள் பற்றிய தகவல்களை முறைப்படி எழுதப்பட்டு அந்த நிறுவனத்தின் அனைவரது பார்வையிலும் படும் இடத்தில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
- கூடுதல் நேரம் வேலை பார்த்தால் அதற்கான கூடுதல் தொகை வழங்க வேண்டும்.
- அதன்படி ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும், கூடுதல் நேரம் தேவையெனில் ஒரு நாளைக்கு 10.30 மணி நேரமோ அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேலோ பயன்படுத்தக்கூடாது.
- அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாகவோ, அல்லது விடுமுறை காலத்திலோ தொழிலாளர்கள் வேலை பார்ப்பது தெரியவந்தால் மேலாளர் மீதோ, நிறுவனத்தின் மீதோ குற்றமாக கருத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
- இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது, ஒரு வேளை அதற்கான அவசியம் இருந்தால் அவர்களின் எழுத்துப்பூர்வமான சம்மதத்துடனே பணியில் ஈடுபடுத்த வேண்டும், அவ்வாறு பணியில் இருக்கும் பெண்களுக்கு இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- இரவில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.
- தொழிலாளர்களுக்கு கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.