சென்னை பெரியமேட்டில் நடைபெற்ற, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக தண்ணீரை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மைலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் நட்ராஜ் பேசுகையில், ‘2015ஆம் ஆண்டுக்குப் பின் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டுள்ளது. அரசைத் தட்டிக் கேட்க வேண்டிய பங்கும் மக்களுக்கு உள்ளது. மழைநீர் வடிகாலில் பணத்தை விரயம் செய்வதாக நினைப்பது தவறானது. நமக்கு வரும் தண்ணீரை நாம் சேமிக்க எப்போதும் தவறக் கூடாது.
குறைந்த செலவில் மழைநீரைக் பாதுகாத்துச் சேமிக்கப் பல திட்டங்கள் உள்ளது. அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆயிரம் குளங்களைக் கொண்ட நகரம் தான் சென்னை. ஆனால் அவையெல்லாம் எங்கே போனதென்று தெரியவில்லை. எனவே தண்ணீரைச் சேமிப்பதில் இனியும் நாம் தாமதிக்கக்கூடாது’ என்றார்.
இதனையடுத்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் பேசுகையில், ‘சென்னையில் தண்ணீர் பிரச்னையே இல்லை. ஆனால் இங்கு நல்லாட்சி இல்லை என்பதில் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வேண்டும், பொதுமக்களுக்குத் தண்ணீர் வேண்டும் எனப் பல தேவைகள் இருந்தும், அவற்றை முறையாக அரசு கையாளவில்லை. சென்னை நகருக்காக அரசாங்கத்தை மறுகட்டமைப்பு செய்தால் மட்டுமே, தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்.