தமிழ்நாட்டில் கனிமொழி, டி.ராஜா, மைத்ரேயன், அர்ஜுனன், ரத்தினவேல், லட்சுமணன் ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சட்டப்பேரவையில் உள்ள திமுக, அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கைப்படி தலா மூன்று ராஜ்யசபா உறுப்பினர்கள் வர வேண்டும். இந்த ஆறு பதவிகளுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி ஜூன் 8ஆம் தேதி வரை நடக்கிறது. அதேபோல், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு ஜூலை 11ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 18ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிந்த கையோடு மாலை 5 மணிக்கே முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை நடத்தும் அலுவலராக சட்டப்பேரவை செயலர் ஸ்ரீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் சுயேச்சைகளும் போட்டியிடலாம் என்றாலும் கூட, திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கே அதிக எம்.எல்.ஏ.க்களின் பலம் இருப்பதால் அந்த கட்சிகள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை எட்டாம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்பதால் ஜூலை 5, 6 ஆகிய தேதிகளில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மக்களவைத் தேர்தல் கூட்டணியின் போது திமுக சார்பாக மதிமுகவிற்கு ஒரு சீட்டும், அதிமுக சார்பாக பாமகவிற்கு ஒரு சீட்டும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.