மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் குழுவால் நிர்ணயம் செய்த கட்டண விவரம், இணையதளத்தில் வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தனியார்ப் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிகுலேசன், மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள், தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விபரம் தனியார்ப் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவின் www.tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அந்தப் பள்ளிகளின் பட்டியலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், தங்கள் மாவட்டத்திலுள்ள, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் பட்டியலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து, அங்கீகாரம் பெறப்பட்ட பின்னரும், இதுவரை கட்டண நிர்ணயம் செய்யப்படாத பள்ளிகளின் பட்டியலைத் தயார் செய்யவேண்டும்.
அப்பள்ளிகள் ஒரு மாதத்திற்குள் தனியார் கல்விக் கட்டண நிர்ணய குழுவிற்கு விண்ணப்பம் செய்து கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தனியார்ப் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் விபரத்தினை வரும் 1ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.