மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. அரசியல் நோக்கத்துடன் மோடி அரசு இதனை செய்வதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், "எனக்குக் கிடைத்த தகவல்; என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமானவரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமானவரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சிதம்பரத்தின் ட்வீட் குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ”அனைத்தையும் இடம் மாற்றிவிட்டு மணமகளே, மணமகளே வா வா என்கிறார் ப.சிதம்பரம்” என விமர்சனம் செய்துள்ளார்.