வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான வேட்புமனு பரிசீலனை 27ஆம் தேதி முடிவடைந்தது. இதில் வேட்புமனு பரிசீலனையின்போது விண்ணப்பம் செய்திருந்த 45 வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 21 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 24 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று மாலை 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. தகுதிபெற்ற வேட்பாளர்களில் சுயேச்சை வேட்பாளர் ஜெகன் மட்டும் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இறுதி வேட்பாளர்களாக 23 பேர் தற்பொழுது களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணியினை வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார். இந்த பணி வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், திமுக வேட்பாளர் கலாநிதிக்கு உதயசூரியன், அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் போட்டியிடும் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு முரசு, சுயேச்சையாக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் சந்தானகிருஷ்ணனுக்கு பரிசு பெட்டகம், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஏசி மவுரியாவுக்கு டார்ச் லைட், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் கரும்பு விவசாயி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஞானசேகருக்கு யானை உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கும் பணி நடைபெற்றது.