தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள இடங்களுக்கு 2019 - 20ஆம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலைச் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கு 18 ஆயிரத்து 738 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியான 17 ஆயிரத்து 122 மாணவர்களுக்குத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான தரவரிசை பட்டியலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கால்நடை மருத்துவ பட்டப் படிப்பில் தருமபுரியைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவி முதலிடத்தையும், தூத்துக்குடி மாணவி ஜேன் சில்வியா இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாணவி வர்ஷா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சிவகங்கை மாணவி லட்சுமி பிரியதர்ஷினி முதலிடத்தையும், திருச்சி மாணவி ஐஸ்வர்யா இரண்டாமிடத்தையும், தர்மபுரி மாணவர் சுரேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் தமிழ்நாடு கால்நடைத் துறை மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வறட்சி காலமாக உள்ளதால் கிராமப்புறங்களில் கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீர் அளிப்பதற்காக 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தொட்டிகளை உள்ளாட்சித் துறையுடன் இணைந்து கட்டி தந்துள்ளோம்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,800 ஏக்கர் பரப்பளவில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு அனைத்து வகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுடன் கால்நடைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாநில அரசால் வழங்கப்படும் விலையில்லா ஆடு, கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தால் கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அவற்றிற்குத் தேவையான சிகிச்சைகளை அளிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகளவில் கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களைத் தொடங்க வேண்டும் என முதலமைச்சரிடம் பேசியுள்ளோம், என்றார்.