சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”வருகிற 12ஆம் தேதி தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நான்கு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். குறிப்பாக கிருஷ்ணகிரி, விருதுநகர், சேலம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலினும் ராகுல் காந்தி பரப்புரையில் பங்கேற்பார்.
டெல்லியில் போராட்டம் நடத்தியபோது தன்னை பார்க்க வராத பாஜக தலைவர் அமித்ஷாவை விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அய்யாக்கண்ணு சென்று பார்த்தது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் உள்ளது. விவசாயிகளுக்கு எந்தத் திட்டத்தையும் அறிவிக்காத பாஜக தேர்தல் அறிக்கையை அய்யாக்கண்ணு வரவேற்பது வியப்பளிக்கிறது.
பாஜக திட்டமிடாமல் திட்டங்களை அறிவித்துவருகிறது அதற்கு மிகப்பெரிய உதாரணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை. அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி தொடர்பான முரண்பாடுகள் இப்போது சரி செய்யப்படும் என்று மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு எந்த நலனும் அறிவிக்கவில்லை. பல மாநிலங்களில் உள்ள நதிகளை இணைப்பது சாத்தியமில்லை.
ஒரே மாநிலத்தில் ஓடும் நதிகளை மட்டும் இணைக்க முடியும். காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு பல்வேறு அரசியல் இருக்கிற சூழலில் பல்வேறு மாநில நதிகளை இணைப்பது முடியாத ஒன்று. தேர்தல் பரப்புரையின்போது ஆரத்தி எடுப்பதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். இதில் தேர்தல் ஆணையம் தனி கவனத்துடன் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆரத்தி தட்டில் பணம் போடுவதை காவல்துறையினர் வேடிக்கை பார்கின்றனர். தேனி தொகுதியில் தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு பணம் கொடுத்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.