திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும், சென்னை வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ் இடையிலான மெட்ரோ சேவை, திருச்சி விமான நிலைய புதிய டெர்மினலுக்கான அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைப்பதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். அவரின் வருகையையொட்டி சிறப்பு ஏற்பாடுகளை பாஜகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி மதுரை வந்திருந்தபோது அவருக்கு எதிராக வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல நாளை திருப்பூருக்கும், வரும் 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் பிரதமர் மோடி வரும்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தப் போவதாக வைகோ அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் வழக்கில் ஆஜராவதற்காக டெல்லி சென்றிருந்த வைகோ, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த தகவலை படத்துடன் தனது முகநூல் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருந்தார்.
இது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது சிவகாசி பட்டாசு தொடர்பான வழக்கு மார்ச் 10ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அது தொடர்பாக ஆலோசிப்பதற்காகவே நிர்மலா சீதாராமன், ஹர்ஷவர்தனை சந்தித்ததாகவும், கஜா புயல் பாதிப்பை உணர்ந்து மக்கள் பக்கம் நின்று கருத்து சொன்னவர் நிர்மலா சீதாராமன் என்றும் அவர் கூறிய கருத்து அவரது கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுஒருபுறம் இருக்க பரபரப்புக்கு பஞ்சமில்லாத பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் 'திருப்பூரில் கருப்புக் கொடி, டில்லியில் வெள்ளைக் கொடியா' என வைகோவின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார். ஹெச். ராஜாவின் பக்கத்தில் பதிவிடப்படும் ஒவ்வொரு ட்வீட்டையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தெறிக்க விடுவர். இந்நிலையில் இந்த ட்வீட் என்ன ஆகுமோ?