தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் துறையினர் திரைப்பட இயக்குநர் இரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இரஞ்சித் தனக்கு முன்பிணை வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்தார். இவ்வழக்கு நேற்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பல்வேறு புத்தகங்களிலிருந்தும் தான் அறிந்த வரலாற்றுத் தகவல்களையே பேசியதாகவும், ஆனால் தான் பேசியது மட்டும் தவறான நோக்கில் சித்தரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதே போல் தனது பேச்சு எந்த சமூகத்தினருக்கு பிரச்னையை ஏற்படுத்தவில்லை, ஆகையால் தனக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரினார்.
அதற்கு, ஆயிரம் ஆண்டுகள் கழித்து இது குறித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன? எனக் கேள்வியெழுப்பிய நீதிபதி, மனுதாரர் தேவதாசி முறை குறித்துப் பேசியுள்ளார். தேவதாசி முறை பல பெரும் தலைவர்களின் முயற்சியால் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதேபோல, நிலம் கையகப்படுத்துதல் குறித்துப் பேசியுள்ளார். இன்றும் அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி, அதற்கான நிவாரணங்களை வழங்கி வருகிறது. அவ்வாறிருக்கையில் ராஜராஜ சோழனை மட்டும் குறிப்பிடுவது ஏன்? பேசுவதற்குப் பல தகவல்கள் இருக்கையில், மக்கள் கொண்டாடும் மன்னன் ஒருவனை இவ்வாறு பேசுவது ஏன்? எனச் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து அரசுத்தரப்பில் இரஞ்சித்திற்கு முன்பிணை வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 19ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்குமாறு, இரு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவரை திருப்பனந்தாளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இரஞ்சித்தைக் கைது செய்ய மாட்டோம் எனக் காவல் துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
அதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி, இது தொடர்பாக காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.