தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலில் உள்ள மீன்வளத்தை பாதுகாத்து, இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து ஜூன் 14ஆம் தேதிவரை மீன்பிடிக்க மாநில அரசு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகு, வலை உள்ளிட்டவற்றை சீரமைப்பது வழக்கம்.
இந்தக் காலகட்டத்தில் மீன்பிடித் தொழில் இல்லாமல் இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் நிவாரண நிதி வழங்குவது வழக்கம். அதேபோல் இந்தாண்டிற்கான நிவாரண நிதியை மாநில அரசு அறிவித்துள்ளது. அதில் மீனவ குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும், இந்த நிதி மூலம் 1.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும், இதற்காக ரூ. 83.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.