உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா 28 .12. 2018 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு இளங்கலை பொறியியல் மாணவர் சேர்க்கை, முதுகலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2019 -20 ஆம் ஆண்டில் நடத்துவதற்கான குழுவினை நியமனம் செய்து அறிவித்தது.
அதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைவராகவும், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் இணைத் தலைவராகவும், உறுப்பினர்களாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், அரசு தேர்வுத் துறை இயக்குனர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர் செயலாளர் உள்ளிட்டோர் கலந்தாய்வை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாணையில் உயர்கல்வித்துறை செயலாளர் தேவை ஏற்பட்டால் ஆய்வு செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பழைய அரசாணையை மாற்றிவிட்டு புதிய அரசாணை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அரசு அதற்கு எந்தவித பதிலும் தெரிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா பொறியியல் கலந்தாய்வு 2019-20 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மீண்டும் கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்துவது குறித்து ஆலோசனை செய்து உள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.