மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ததை வரவேற்கிறோம். ஆனால் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், மாநிலச் செயலாளர் சாந்தி ஆகியோர் கூறியதாவது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.
ஆனால் அதே நேரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலுள்ள இடங்களை நிரப்புவதற்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வினை நடத்த வேண்டும்.
இந்த நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தினால் இளநிலை மருத்துவ படிப்பில் சேர மாணவர்கள் 90க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். எனவே அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வினை எழுதும் வகையில் அறிவிக்க வேண்டும்.
அதேபோல் பள்ளி கல்வியானது மாநில உரிமை பட்டியலுக்கு மாற்றப்படும் என்பதை வரவேற்கிறோம். இதனால் பெரிய அளவில் பயன் கிடைக்காது. எனவே உயர் கல்வியையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் உயர்கல்வியில் வளர்ச்சி அடைய முடியும்.
மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.