மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னையிலுள்ள அக்கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் சாதிவெறி சக்திகளால் ஏற்படும் படுகொலை தொடர்கதையாகி வருகிறது. அதேபோல் மாதம் ஒன்று அல்லது 10 நாட்களுக்கு ஒரு ஆணவக் கொலை அரங்கேறி வருகிறது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், கரையிருப்பு என்ற கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய வாலிபர் சங்கத்தின் ஊழியராக பணியாற்றி வரும் அசோக் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 25 வயது கூட நிரம்பாத அந்த இளைஞரின் படுகொலை தமிழகத்தையே உலுக்கும் விதமாக அமைந்துள்ளது. இதைக் கண்டித்து நாங்கள் அங்கு மாபெரும் மக்கள் போராட்டத்தை நடத்தினோம்.
இதிலிருக்கும் உண்மையைக் கண்டறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்மை அறியும் குழு அமைத்து அங்கு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அசோக் தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவர் தாயார் கையில் வைத்திருந்த புல்லுக்கட்டு, சாலையை வழிமறித்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது லேசாகப் பட்டதால் அவரையும் அவரது தாயாரையும் தாக்கி உள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு தலித் தங்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளார் என்பதற்காக அவரை படுகொலை செய்துள்ளனர். தலித் தங்களுக்கு அடங்கி ஒடுங்கியிருக்க வேண்டும் என்று மேலாதிக்க சாதியினர் நினைக்கின்றனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கரையிருப்பு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எட்டு சாதியக் கொலைகள் நடைபெற்றுள்ளன. அசோக் கொலையில் காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சாட்சிகள் கலைக்கப்படாத வண்ணம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அவ்வாறே காவல்துறையினரும் உறுதியளித்துள்ளனர்.
இதைக் கண்டித்து வரும் 12 ஆம் தேதி அங்குப் பெரிய கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் இதர இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சாதி படுகொலைகளைக் கண்டித்து அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் தங்களது எதிர்ப்புகளைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.