சென்னை லயோலா கல்லூரியில் உள்ள வாக்குப்பதிவு மையம் 229-ல் நடிகர் கார்த்திக் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடை மகனும், நடிகருமான கெளதம் கார்த்திக்கும் உடன் வந்திருந்தார். அவர்கள் இருவரும் வரிசையில் நின்று மக்களோடு வாக்கை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலையிலேயே வாக்கை பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் வாக்குப் பதிவு செய்ய வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை வாக்காளர்கள் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விவி பேட் வசதியானது பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது இருந்த சந்தேகங்கள் குறையும்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான கருத்து இருக்கும். சில சமயம் நாம் கூட பழைய முறை வேண்டும் எனக் கருதுவோம். மின்னணு பொருட்களை பொறுத்த வரை எவ்வளவுதான் சரியாக செய்தாலும், சில சமயம் தவறு நடக்கலாம். இதுபோன்ற செயல்களுக்கு இரண்டு முறை என்பது மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும்.
தீவிர அரசியலில் இருந்து நீங்கள் ஒதுங்கி விட்டீர்களா? என கேட்டதற்கு, ஆமாம் ரொம்ப வெயில் என சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். பின்னர் இந்த முறை பிரச்சாரத்துக்கு சென்றேன். பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார்.