காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதரை தரிசனத்திற்காக தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், கோயில் நிர்வாகத்திற்கு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஜமீன் குடும்பத்தினர் அத்திவரதரை தரிசிக்கவும் ஒருநாள் உற்சவமூர்த்தி பூஜையில் கலந்துகொள்ளவும் அனுமதி அளிக்க கோரிக்கை-விடுத்துள்ளனர்.
இது குறித்து உடையார்பாளையம் ஜமீன்தார் வம்சாவளி ராஜ்குமார், பழனியப்பன் கூறியபோது, "16ஆம் நூற்றாண்டில் முகலாய படையெடுப்பின்போது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகிய கோயில்களில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு உடையார்பாளையத்தில் உள்ள எங்களது ஜமீன்தார் அரண்மனை, கோயில்களில் பாதுகாப்பாக 40 ஆண்டுகளாக வைத்திருந்தோம்.
மேலும், காஞ்சிபுரம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆகம விதிகளின்படியே பூஜைகள் அனைத்தும் நடைபெற்றன. போர் முடிவுற்ற பிறகு கோயில் உற்சவர் சிலைகள் அனைத்தும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கோயில்கள் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கோயில் சிலைகளை பாதுகாப்பாக வைத்திருந்து பூஜைகள் நடத்தியதால் அதற்கென்று உடையார்பாளையம் ஜமீனுக்கு தனி உற்சவ பூஜைகள் தொடர்ந்து நடத்திட சிறப்பு அந்தஸ்து காஞ்சிபுரம் கோயிலில் வழங்கப்பட்டன.
எங்கள் முன்னோர்கள் காஞ்சிபுரம் கோயிலில் பங்குனி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பூஜை செய்துள்ளனர். இடையில் ஏற்பட்ட துக்க காரியங்களால் பூஜை தடைபட்டது.
தற்போது நாங்கள் அத்திவரதரை தரிசிக்கவும் ஒரு நாள் உற்சவத்தில் கலந்துகொள்ளவும் எங்களுக்கு அனுமதி தரவேண்டி கோயிலுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கும் அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். இதுவரை எவ்வித பதிலும் இல்லை. எனவே இதில் தமிழ்நாடு அரசு தலையிட்டு ஜமீனுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.