ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு இன்று பல மாவட்டங்களில் மர நடு விழா, மரக்கன்று வழங்கும் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, பேரணி என பலதரப்பு மக்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் தினத்தன்று அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பசுமை காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்படி வெற்றியூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள ஊராட்சிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் புங்கன் வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் வகையில் கன்றுகளைச் சுற்றி கூண்டுகளும், 2 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டுள்ள கன்றுகளை முழுமையாக பராமரிக்க சுற்றிலும் முள் வேலியும் அமைத்தனர்
இது குறித்து கிராம இளைஞர் கூறும்போது, "பசுமைக் காடுகளை உருவாக்குவதன் மூலம் வருங்காலங்களில் தூய்மையான காற்றை கிராம மக்கள் சுவாசிக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இது அமையும். இதன் மூலம் அருகிலுள்ள கிராம மக்களும் மர நடுதலில் ஈடுபடுவார்கள்’ என்றார்.
இளைஞர்கள் ஒன்று கூடி பசுமை காடுகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அனைவரின் பாராட்டை பெற்றது.