அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் அண்மையில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அதனை மூட வேண்டும் எனக்கோரி அப்பகுதி பெண்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த செந்துறை காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, பெண் ஒருவர் எங்களுக்கு எந்த டாஸ்மாக் கடையும் வேண்டாம் எனக்கூறி காவல் துறையினர் காலில் விழுந்தார். பின்னர் கடையை அப்புறப்படுத்த போலீசார் மூன்று மாதம் அவகாசம் கேட்டதற்கு பெண்கள் மறுப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து 25ஆம் தேதிக்குள் கடை அப்புறப்படுத்தபடும் என காவல் துறையினர் உறுதிளித்ததையடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
மேலும் சொன்னபடி டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் கடையின் உள்ளே புகுந்து மதுபானங்களை உடைத்தெறிவோம் எனவும் பெண்கள் எச்சரிக்கை விடுத்தனர்.