அரியலூர்: கடந்த சில நாட்களாக உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல நகரங்களின் மீது நடத்தப்படும் தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனையடுத்து இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவர்களை அண்டை நாடுகளுக்கு வரவழைத்து விமானம் மூலம் மீண்டும் இந்தியா அழைத்து ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல கட்டங்களாக இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரேனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற அரியலூரின் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா எனும் மாணவியும் அங்கு சிக்கித் தவித்துள்ளார்.
இவர் கடந்த டிசம்பரில் உக்ரேனில் உள்ள ரூத்ருர் நேஷனல் யூனிவர்சிட்டியில் இணைந்து பயின்று வந்துள்ளார். இந்நிலையில் இந்திய தூதரகத்தின் உதவியுடன் மீட்கப்பட்ட கீர்த்தனா இன்று (மார்ச் 1) உக்ரேனில் இருந்து தனது சொந்த ஊரை வந்தடைந்தார். அப்போது பத்திரமாக வந்தடைந்த தனது மகளை வரவேற்கும் விதமாக, அவரது பெற்றோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
செய்தியாளர்களிடம் மாணவி கீர்த்தனா பேசுகையில், “நாங்கள் இருந்த பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பயின்று வந்தோம். அங்கு போர் பதற்றம் தெரியவில்லை. நேற்று புத்தாபெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து டெல்லி வந்தடைந்து, பின்னர் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்து வீடு திரும்பினேன்.
என்னுடன் தென்காசி, திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர்களும் உடன் வந்தனர். ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எனது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழ்நாட்டு மாணவர்கள்