அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள திருமழபாடியில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமிகள் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கொள்ளிடம் ஆறு, இந்த கோயிலுக்கு எதிரேயும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் செல்லும்.
இதனால் இது காசிக்கு நிகராகக் கருதப்படும் ஒரு புண்ணிய தலமாக விளங்குகிறது. இந்நிலையில், இக்கோயிலில் மாசி மகப்பெருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது, 'ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய' என்ற மந்திரத்தை பக்தர்கள் முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நந்தியம் பெருமாள் திருக்கல்யாணம் அடுத்த மாதம் இரண்டாம் தேதி நடைபெறவுள்ளது.
'நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடைபெறும்' என்ற சொல் வழக்கு உண்டு என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. குறிப்பாக திருமணம் தடை உள்ள ஆண், பெண்கள் நந்தி திருமணத்தைப் பார்த்தால் அடுத்த ஆண்டிற்குள் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும். மேலும் இத்தேர்த்திருவிழாவில் அருகில் உள்ள கிராமங்கள், மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
இதையும் படிங்க:வனகுண்டாமலையில் காட்டுத் தீ: கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர்!